304. காஞ்சி திவ்ய தேசப் பயணம் - Part 1
ஏற்கனவே திட்டம் தீட்டி, ஜனவரி 26 அன்று காஞ்சியில் உள்ள 15 வைணவ திவ்ய தேசங்களுக்கு செல்ல, ஒரு பயணம் ஏற்பாடு செய்திருந்தேன். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்குப் பின் காஞ்சி செல்வதாலும், ஒரு காலத்தில் பல பள்ளி விடுமுறைகளை அங்கே குதூகலமாக செலவிட்டது ஞாபகத்தில் பசுமையாக இருப்பதாலும், நான் சுற்றித் திரிந்த இடங்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பிலும், ஒரு சுகமான பரபரப்பு தொற்றிக் கொண்டது ! என்னுடன் என் மனைவியும், மாமா, மாமியும் உடன் வந்தனர்.
காலை 6.30 மணிக்கு, காரில் பயணத்தைத் தொடங்கினோம். நடுவில், மோட்டல் ஹைவேயில் காலைச் சிற்றுண்டி. 3 நாட்கள் விடுமுறையில், சொந்த ஊருக்கோ சுற்றுலாவாகவோ மக்கள் பயணிக்கும் சமயம் என்பதால், உணவகத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. தை வெள்ளிக்கிழமை வேறு, ஒரே நாளில் 15 கோயில்களிலும் தரிசனம் முடித்து சென்னை திரும்ப முடியுமா என்ற கேள்வி மனதில் எழுந்தது. குறிப்பிட்ட 15 கோயில்களில், திருப்புட்குழி தவிர, மற்ற 14-ம் 6-7 கி.மீ பரப்பில் தான் அமைந்துள்ளன. என்ன, பகல் 12 மணிக்குக் கோயிலை மூடினால், மாலை நான்கு மணிக்குத் தான் மறுபடியும் திறப்பார்கள்.
தண்டலம் என்ற இடத்தில் (பீர் தொழிற்சாலை அருகே) கார் சென்று கொண்டிருந்தபோது ஒரு விபத்து ! சவீதா பொறியியற் கல்லூரி பேருந்து ஒன்று, சாலையின் வெளிப்பாதையிலிருந்து, வலப்புறம் திரும்ப வேண்டி, எங்கள் பாதையின் குறுக்கே சடாரென்று நுழைந்தது. எங்கள் கார் ஓட்டுனரின் துரித செயல்பாட்டினால், தெய்வாதீனமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாமல் பிழைத்தோம் ! காரின் வலப்பக்கம் பேருந்தின் மேல் மோதி நின்றதில் காருக்கு பலத்த சேதம். குடியரசு தினம் என்பதால், தகவல் கொடுத்தும் போக்குவரத்துக் காவலர் யாரும் விபத்து நடந்த இடத்திற்கு உடனே வரவில்லை.
சிறிது நேர காத்திருப்பிற்குப் பின், பூந்தமல்லி காவல் நிலையம் சென்று புகார் செய்தோம். பயணத்தை கைவிட்டு, சென்னைக்குத் திரும்பி விடலாம் என்ற யோசனையை நான் வீட்டோ செய்தேன் ! மற்றொரு காரை ஏற்பாடு செய்து, காஞ்சி நோக்கி பயணப்பட்டோம்.
பத்து மணிக்குக் காஞ்சி சென்றடைந்தோம். நுழைந்தவுடன், மண்ணும் சாணமும் கலந்த, எனக்குப் பழக்கப்பட்ட பழைய வாசனை !
முதலில் தரிசித்தது, ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் நிலாத்திங்கள் துண்டப் பெருமாளை! திருமங்கையாழ்வாரால் (திருநெடுந்தாண்டகத்தில்) மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் இவர் !
2059:
நீரகத்தாய். நெடுவரையின் உச்சி மேலாய்.*
நிலாத்திங்கள் துண்டத்தாய். நிறைந்த கச்சி-
ஊரகத்தாய்,* ஒண்துறைநீர் வெ·கா உள்ளாய்.*
உள்ளுவார் உள்ளத்தாய்,* உலகம் ஏத்தும்-
காரகத்தாய். கார்வானத் துள்ளாய். கள்வா.*
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு-
பேரகத்தாய்,* பேராது என் நெஞ்சின் உள்ளாய்.*
பெருமான்உன் திருவடியே பேணினேனே.
பிரம்மாண்டமான, அழகான ராஜகோபுரமும், பெரிய பிரகாரமும் உடைய சிவன் கோயிலிது. கூட்டம் அதிகமாக இருந்ததால், சிவபெருமானை தரிசிக்க முடியவில்லை.
அடுத்து, திருப்பாடகத்தில் வீற்றிருந்த திருக்கோலத்தில் அருள் பாலிக்கும் பாண்டவத்தூதப் பெருமாளை சேவித்தோம். பெரிய காஞ்சிபுரத்தில், கங்கை கொண்டான் மண்டபத்துக்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. பிரம்மாண்டமான (28 அடி உயரம்), நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட, அழகிய முகபாவத்துடனான முலவர் திருவுருவம், குனிந்து தான் திருமுகத்தை தரிசிக்க இயலும் !
கோயிலில் உள்ள கல்வெட்டில், மூலவர் 'தூத ஹரி' என்று குறிப்பிடப்பட்டுள்ளார். உத்சவர் ருக்மிணி சத்யபாமா சமேதராய் காட்சியளிக்கிறார். திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற திருத்தலமிது. காஞ்சி செல்பவர்கள் கட்டாயம் இக்கோயிலுக்குச் சென்று மூலவரை சேவிக்க வேண்டும்.
மகாபாரத போருக்கு முன்னால், துரியோதனனிடம் சமாதானம் பேசி, ராஜ்ஜியத்தில் பாண்டவர்களுக்கான பங்கை கேட்டுப் பெறுவதற்காக, கிருஷ்ணர் பாண்டவத் தூதராக துரியோதன சபைக்கு வந்தபோது, துரியோதனன் கண்ணனை அழிக்க செய்த சதி தோல்வியடைந்ததாகவும், துரியோதனன் பாண்டவர்க்கு 5 அடி நிலம் கூட தர மறுத்ததால் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட சீற்றத்தால் அவர் அமர்ந்திருந்த இருக்கை தூள் தூளானதாகவும், பின்னாளில் ஜனமேயஜயன் என்ற பாண்டவ வழி வந்த மன்னனுக்கு ஸ்ரீமன் நாராயணன் இத்தலத்தில் விஸ்வரூப தரிசனம் அளித்ததாகவும் தலபுராணம் கூறுகிறது.
திருமங்கை
கல்லார்மதிள்சூழ்* கச்சி நகருள்நச்சிப்*
பாடகத்துள் எல்லா உலகும்வணங்க* இருந்தஅம்மான்*
இலங்கைக்கோன் வல்லாளாகம்* வில்லால் முனிந்த எந்தை*
விபீடணற்கு நல்லானுடைய நாமம்சொல்லில்* நமோநாராயணமே
கல் மதில்களால் சூழப்பட்ட அழகிய காஞ்சி நகரில் உள்ள திருப்பாடகத்தில் கம்பீரமாக அமர்ந்து, உலகமெல்லாம் தன்னை வணங்க அருள் பாலிக்கும் எம்பெருமானே, தனது அம்பால் வலிமை மிக்க இராவணனை அழித்தவனும், விபீடணனுக்கு உகந்தவனும் ஆவான். 'நமோ நாராயணமே' என்று அவனது திருநாமத்தைப் போற்றித் தொழுவது ஒன்றே, நாம் உய்வதற்கான வழியாகும் !
பூதத்தாழ்வார்
உற்று வணங்கித்* தொழுமின் உலகேழும்*
முற்றும் விழுங்கும் முகில்வண்ணம்,* - பற்றிப்-
பொருந்தாதான் மார்பிடந்து* பூம் பாடகத்துள்-
இருந்தானை,* ஏத்தும் என் நெஞ்சு.
பேயாழ்வார்
சேர்ந்த திருமால்* கடல்குடந்தை வேங்கடம்*
நேர்ந்தவென் சிந்தை நிறைவிசும்பு,* - வாய்ந்த
மறைபாடகம் அனந்தன்* வண்துழாய்க் கண்ணி,*
இறைபாடி ஆய இவை.
மூன்றாவதாக, பச்சை வண்ணன் மற்றும் பவளவண்ணன் கோயில்களுக்குச் (இவை இரண்டையும் சேர்த்து ஒரு திவ்ய தேசமாக நோக்குவது மரபு) சென்றோம். இரண்டு உத்சவ மூர்த்திகளும் பேரழகு ! பவளவண்ணப் பெருமாள் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்திலும், பச்சை(மரகத)வண்ணப் பெருமாள் ஆதிசேஷன் மேல் (பரமபதநாதனாக) வீற்றிருந்த திருக்கோலத்திலும் அருள் பாலிக்கின்றனர். பச்சைவண்ணர் சிவனின் அம்சமாகவும், பவளவண்ணன் பார்வதியின் அம்சமாகவும் கருதப்படுவதால், இருவரையும் ஒரு சேர சேவிப்பது, சிவனையும் பார்வதியையும் சேர்ந்து தரிசிப்பதற்கு ஒப்பாகும்.
பச்சைவண்ணர் ராமாவதார ரூபமாகக் கருதப்படுவதால், இங்குள்ள தாயாருக்கு த்ரிரூபம் - லஷ்மி ரூபம், யந்த்ர ரூபம் மற்றும் சீதா ரூபம் என்று கோயில் பட்டர் சொன்னார்.
திருமங்கை மன்னன் பவளவண்ணரை (திருநெடுந்தாண்டகத்தில்) மங்களாசாசனம் செய்துள்ளார். பாசுரத்தில், பெருமாள் மேல் அவருக்கிருந்த பேரன்பும், பக்தியும் பிரவாகமாய் வெளிப்பட்டுள்ளன !
2060:
வங்கத்தால் மாமணிவந்து உந்து முந்நீர்-
மல்லையாய்.* மதிள்கச்சி ஊராய். பேராய்,*
கொங்கத்தார் வளங்கொன்றை அலங்கல் மார்வன்*
குலவரையன் மடப்பாவை இடப்பால் கொண்டான்,*
பங்கத்தாய். பாற்கடலாய். பாரின் மேலாய்.*
பனிவரையின் உச்சியாய். பவள வண்ணா,*
எங்குற்றாய் எம்பெருமான். உன்னை நாடி*
ஏழையேன் இங்கனமே உழிதருகேனே.
அடுத்து, காமாட்சி அம்மன் கோயிலுள் இருக்கும் திருக்கள்வனூர் ஆதிவராகப் பெருமாளை சேவித்தோம். அம்மன் சன்னதிக்கு வெளியே வலப்புறம் நின்ற திருக்கோலத்தில் பெருமாளும் தாயாரும்(அஞ்சிலைவல்லி) காட்சி தருகின்றனர். ஒரு முறை பார்வதியும் லஷ்மியும் பேசிக் கொண்டிருந்தபோது, பெருமாள் ஒட்டுக்கேட்பதை பார்வதி கண்டு, தன் அண்ணனான பெருமாளை 'கள்வா' என்று வாஞ்சையோடு கூப்பிட்டதால், கள்வர் என்றும் அறியப்படுகிறார். அன்று அம்மனைக் காண கூட்டம் அதிகம் என்பதால், பெருமாள் அருகில் அர்ச்சகர் யாரும் வரவில்லை !!! தை வெள்ளியன்று, லோகநாயகி காமாட்சியையும் தரிசிக்கும் பெரும்பாக்கியம் கிட்டியது. திருமங்கை இத்தலப்பெருமாளை ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாசுரத்தைப் (2059) பார்க்கவும்.
மணி பன்னிரெண்டை நெருங்கி விட்டதால், உலகளந்த பெருமாள் (திருஊரகம்) கோயிலுக்கு விரைந்தோம். இந்த திவ்யதேச வளாகத்துள் இன்னும் மூன்று திவ்யதேசப் (திருநீரகம், திருக்காரகம், திருக்கார்வனம்) பெருமாள்களும் அருள் பாலிக்கின்றனர். பெரிய மதிற்சுவர்களும், பழமையான ராஜகோபுரமும் கொண்ட கோயிலிது. பிரம்மாண்டமான மூலவர், த்ரிவிக்ரம அவதாரக் கோலத்தில், ஒரு காலை நிலத்தில் ஊன்றி, மற்றொரு காலை தூக்கி நிறுத்தி காட்சி தருகிறார். ஊன்றிய பாதத்தின் கீழ் மாபலியின் தலையைக் காணலாம். அருமையான சேவை ! தாயார் அம்ரிதவல்லி நாச்சியார். திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் மங்களாசாசனம்.
திருமங்கையாழ்வார்
2064@
கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய். என்றும்*
காமரு பூங்கச்சி ஊரகத்தாய். என்றும்,*
வில்லிறுத்து மெல்லியல்தோள் தோய்ந்தாய். என்றும்*
வெ·காவில் துயிலமர்ந்த வேந்தே. என்றும்,*
மல்லடர்த்து மல்லரை அன்றுஅட்டாய். என்றும்,*
மாகீண்ட கைத்தலத்து என் மைந்தா. என்றும்,*
சொல்லெடுத்துத் தன்கிளியைச் சொல்லே என்று*
துணைமுலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே. 13
திருமழிசையாழ்வார்
814@
நன்றிருந்து யோகநீதி* நண்ணுவார்கள் சிந்தையுள்,*
சென்றிருந்து தீவினைகள்* தீர்த்ததேவ தேவனே,*
குன்றிருந்த மாடநீடு* பாடகத்தும் ஊரகத்தும்,*
நின்றிருந்து வெ·கணை* கிடந்ததென்ன நீர்மையே? (63)
815@
நின்றது எந்தை ஊரகத்து* இருந்தது எந்தை பாடகத்து,*
அன்று வெ·கணைக் கிடந்தது* என்னிலாத முன்னெலாம்,*
அன்று நான் பிறந்திலேன்* பிறந்த பின் மறந்திலேன்,*
நின்றதும் இருந்ததும்* கிடந்ததும் என் நெஞ்சுளே. (64)
பெருமாளே ! நீ, ஊரகத்தில் நின்ற திருக்கோலத்திலும், பாடகத்தில் வீற்றிருந்த திருக்கோலத்திலும், திருவெ·காவில் சயன திருக்கோலத்திலும் ஊழிக்காலம் தொட்டு உள்ளாய் ! அப்போது நான் பிறக்கவில்லை, பிறந்த பின்னர் உன்னை நினைக்காத நாளில்லை ! அதனால், நீ, நிற்பதுவும், இருப்பதுவும், கிடப்பதுவும் என் நெஞ்சமே ஆகும்.
மூன்று சின்ன சன்னதிகளில் எழுந்தருளியிருக்கும் திருநீரக ஜகதீஸ்வரப் பெருமானையும், திருக்காரகக் கருணாகரப் பெருமாளையும், திருக்கார்வனக் கள்வர் பெருமாளையும் சேவித்தோம். திருமங்கை மூன்று பெருமாள்களையும் ஒரே பாசுரத்தில் மங்களாசாசனம் செய்துள்ளார். பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ள பாசுரத்தைப் (2059) பார்க்கவும்.
மணி பன்னிரெண்டரை ஆகி விட்டபடியால், மார்னிங் ஷோ இனிதே நிறைவடைந்தது :) முதல் ரவுண்டில் 8 திவ்யதேசங்களுக்கு செல்ல முடிந்தது ! கோயில்கள் மதியம் மூடப்படுவதால், மாலை 4 மணிக்கு மேல் தான் இரண்டாவது ரவுண்ட் ஆரம்பிக்க முடியும் ! அலைச்சலில் நல்ல பசி வேறு ! சரவணபவன் ஏசி அறையில் பிரமாதமான சாப்பாடு. அடுத்து சன்னதித் தெருவில் தெரிந்தவர் ஒருவர் வீட்டில் கொஞ்சம் ஓய்வெடுத்தோம், அடுத்த திவ்யதேச ரவுண்டை சுறுசுறுப்பாக ஆரம்பிக்க, அருமையான தேநீர் கிடைத்தது.
அடுத்த பதிவில் இரண்டாவது சுற்றைத் தொடர்கிறேன் !
என்றென்றும் அன்புடன்
பாலா
*** 304 ***
10 மறுமொழிகள்:
பாலா
முதல் படம் கோபுரம் தவிர மற்ற படங்கள் தெரியவில்லை :)
பாலா,
ஏதோ இங்கு தான் பக்கத்தில் இருக்கிறது என்று பெயர்,போக கைவருவதில்லை.
உங்க புண்ணியத்தில் ஒரெ ஒரு கோபுரம் மட்டும் தரிசனம் கிடைத்தது.
அப்படியே முடிந்தால் படங்களை மெயில் பண்ணுங்களேன்.நன்றி
சங்கர்,
நன்றி. இப்போது எல்லா படங்களும் தெரிகின்றன.
குமார்,
நன்றி. கோபுர தரிசனம் கோடி புண்யம் அல்லவா :)))
ஒரு சந்தேகம், பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு போக 'கை வர வேண்டுமா' அல்லது 'கால் வர வேண்டுமா' ? ;-)
இன்னும் சில படங்களை சேர்த்துள்ளேன்.
எ.அ.பாலா
//ஒரு சந்தேகம், பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு போக 'கை வர வேண்டுமா' அல்லது 'கால் வர வேண்டுமா' ? ;-)//
கார் வரவேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பாலா, பாண்டவதூதனைப் பார்க்க(மீண்டும்) ஆசையாகிவிட்டது. என்ன ஒரு பெரிய தோற்றம்.
படங்கள் இன்னும் நிறைய போடுங்கள்.
இரண்டாவது சுற்றுக்காக காத்திருக்கிறேன்!
பாலா,
இப்பத்தான் காஞ்சீபுரம் கோயில்களைப் பற்றி எழுதிக்கிட்டு இருக்கேன். ஒரு ப்ரேக் விட்டுட்டு
இங்கே வந்து பார்த்தா
அருமையான அட்டகாசமான பதிவு போட்டுருக்கீங்க.
ரொம்ப அனுபவித்துப் படிச்சேன்.
பாலா
அருமையான திவ்ய தேசப் பயணக் கட்டுரை, மண் வாசத்துடன்!
திகிலுடன் தொடங்கி, திருப்தியுடன் தரிசனம் செய்துள்ளீர்கள்!
நல்ல வேளை, பாண்டவ தூதன், தோரோட்டி அன்று காரோட்டி ரூபத்தில் அனைவரையும் காத்தான்!
டோ ண்டு,
உங்கள் குசும்பே, தாங்கள் இன்னும் இளைஞர் தான் என்பதை நீருபிக்கிறது :)
வல்லி சிம்மன்,
நன்றி. தொடரும் பதிவில், நிறைய படங்கள் போடுகிறேன் !
ஜீவா,
நன்றி. இன்று மாலை வரை (அடுத்த பதிவுக்கு) காத்திருக்கவும் :)
எ.அ.பாலா
துளசி அக்கா,
பாராட்டுக்கு நன்றி. அடுத்த பதிவு தயாராகிக் கொண்டிருக்கிறது.
கண்ணபிரான்,
தேரோட்டி (பார்த்தசாரதி) வசிக்கும் இடத்தில் தானே நானும் வாழ்கிறேன் ! என்னைக் காப்பாற்றாவிட்டால் எப்படி ? ;-)
எ.அ.பாலா
Post a Comment